புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ளது அய்யனார் கோவில். இது ஆசியாவிலேயே உயரமான சிலையாகக் கூறப்படுகிறது. 33 அடி உயரம் கொண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழா இரண்டு நாட்கள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி பிரம்மாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப் பூ மாலை அணிவிப்பதும் மறுநாள் இரவு தெப்பத் திருவிழாவும் தான். இந்த பிரம்மாண்ட குதிரை சிலைக்குப் பக்தர்கள் காணிக்கையாக அணிவிக்கும் காகிதப்பூ மாலைகள், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், திருநாளூர், மறமடக்கி, ஆவணத்தான் கோட்டை, திருச்சிற்றம்பலம் ஆகிய பல கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது.
இந்த வருடம் கரோனா கட்டுப்பாடுகளால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு நாள் முன்னதாக மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. முதல் நாளில் கிராமத்தின் சார்பில் சிறப்பு வழிபாடுகள் செய்தபிறகு குதிரை சிலைக்கு முதல் மாலையாக மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் மலர் மாலைகள் மற்றும் காகிதப்பூ மாலைகள் அணிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த மாலைகளை கார், டாடா ஏஸ், வேன், லாரி போன்ற வாகனங்களில் ஏற்றிவந்து அணிவிக்கின்றனர். கிராமத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்ட பிறகு, பக்தர்கள் மாலைகள் அணிவிக்க நீண்ட வரிசையில் வாகனங்களில் காத்திருக்கின்றனர். பலர் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செய்தனர். இந்த வருடம் 2 நாட்கள் மாலைகள் அணிவிக்கப்படுகிறது. பல இடங்களிலும் அன்னதானமும் நடைபெறுகிறது.