தமிழ்நாட்டில் கும்பகோணம் மாசிமாத மகாமகத் திருவிழாவிற்கு அடுத்து மாசிமகத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது குளமங்கலம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழாவிற்கு தான். இந்த திருவிழாவின் சிறப்பே கோவில் முன்பு அமைந்துள்ள பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப் பூ மாலைகளை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது தான்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரைடி மிண்ட அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழா தான் பெருந்திருவிழா. வழக்கமாக 2 நாட்கள் நடக்கும் மாசிமகத் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக 3 நாட்களாக நடக்கிறது.
அதாவது, கோவில் முன்பு அய்யனாரின் வாகனமாக வானில் தாவிச் செல்லும் வகையில் 35 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளைக் குதிரை சிலைக்கு பக்தர்கள் அதே உயரத்தில் பழங்கள், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளுடன் ஆயிரக்கணக்கான வண்ணக் காகிதப் பூக்களால் செய்யப்பட்ட மாலைகளை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த மாலைகளை லாரி, டிராக்டர், கார், வேன்களிலேயே ஏற்றி வருவார்கள். ஆண்டுக்காண்டு மாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் மாசிமகத்தின் முதல்நாளே மாலைகள் அணிவிக்கும் நிகழ்வுகள் தொடங்கி 2 நாள் திருவிழா 3 நாட்கள் ஆனது.
கொரோனா காலத்தில் கூட நிறுத்தப்படாத ஒரே திருவிழா மாசிமகத் திருவிழா தான். பெரிய கோவில் குதிரை தனக்கு வேண்டிய மாலையை வாங்கிக் கொண்டது என்று பக்தர்கள் கூறுவார்கள். தற்போது கோவில், குதிரை சிலை திருப்பணிகள் நடந்து வருவதால் இந்த ஆண்டு மாலைகள் அணிவிப்பதை விழாக்குழுவினர் தவிர்த்தனர். அதனால் கொரோனா காலத்திலேயே மாலை வாங்கிய குதிரை சிலைக்கு மாலையில்லாத மாசிமகத் திருவிழா நடந்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
குதிரை சிலைக்கு மாலை தான் இல்லை என்பதால் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. வழக்கமான கூட்டத்தைக் காண முடிந்தது. கீரமங்கலம், கொத்தமங்கலம், ஆவணத்தான்கோட்டை, திருநாளூர் தொடங்கி குளமங்கலம் கோவில் செல்லும் வழி நெடுகிலும் அன்னாதானப் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்கள் பசியை போக்கிய பக்தர்கள் 100 அடிக்கு ஒரு இடத்தில் குடிதண்ணீரும் வழங்கினார்கள். கீரமங்கலம் மேற்கு பேட்டை ஜமாத்தார்கள் அய்யனார் கோயில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து தாகம் தீர்த்தனர்.
காவடி, பால்குடம், காவடி என அனைத்து வழிபாடுகளும் நடந்தது. கண்ணைக் கவரும் வண்ணத்தில் ராட்டினம், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் குழந்தைகளை கவர்ந்து இருத்தது. பூச்செடிகள் தொடங்கி எலக்ட்ரானிக் பொருட்கள் வரை விற்பனையானது. சிறப்பு பேருந்துகள், மருத்துவ முகாம், உதவி மையங்கள், தீயணைப்பு வாகனம் அமைக்கப்பட்டிருந்தது. 220 போலீசார், 30 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு செய்திருந்தனர். தெப்பம் இல்லை என்றாலும் தெப்பத்திருவிழா நடக்கிறது.