விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்பாஷ். திருநம்பியான இவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அருணாதேவி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தியாவில் ஆண் - பெண் திருமணம் சட்டப்பூர்வமானது. ஆனால், திருநர் திருமணத்தை சட்டம் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த நிலையில் தான் 2019 ஆம் ஆண்டு அருண்குமார் - ஸ்ரீஜா என்கிற திருநம்பி - திருநங்கை ஜோடி திருமணம் செய்ததை உயர்நீதிமன்ற மதுரை கிளை அங்கீகரித்தது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் நீதிபதியாக இருந்த சுவாமிநாதன் திருநர் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதிகாசங்கள், புராணங்களை மேற்கோள் காட்டியதோடு கேரளாவின் சபரிமலை ஐயப்பனையும் சுட்டிக்காட்டிய நீதிபதி சுவாமிநாதன் இந்த தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு திருநம்பி, திருநங்கை உள்ளிட்ட திருநர் மக்களின் திருமணம் சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை உறுதி செய்தது.
இந்த நிலையில், காதலித்து வந்த அருண்பாஷ், அருணாதேவி திருமணம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக கேரள மாநிலத்துக்கு சென்று அங்குள்ள ஒரு நிறுவனத்திடம் பேசி அங்கு வழக்கறிஞராக உள்ள ஒரு திருநங்கையிடம் உதவி கேட்டுள்ளனர். அவர் மூலமாக ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பகுதியில் தம்மம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் பிரியா என்பவரது அறிமுகம் கிடைத்தது. திருநங்கையான பிரியாவிடம் அந்த கேரள வழக்கறிஞர் இந்த தகவலைக் கூறி இருவரையும் அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு திருநங்கை பிரியா மனித உரிமை செயற்பாட்டாளரும் மூத்த வழக்கறிஞரான ப.பா. மோகனை அணுகி அவர் மூலமாக கோபிசெட்டிபாளையத்தில் இயங்கி வரும் மனிதம் சட்ட உரிமை மையத்திற்கு நேரடியாகச் சென்று இந்த காதல் ஜோடியை அறிமுகப்படுத்தி இவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். மனிதம் சட்ட மையத்தின் நிறுவனரான வழக்கறிஞர் சென்னியப்பன் மற்றும் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் ஆகியோர் இணைந்து பிப்ரவரி 14 ஆம் தேதி திருநம்பியான அருண் பாஷுக்கும் பெண்ணான அருணாதேவிக்கும் சட்ட முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இவர்களின் திருமணத்தை பதிவு செய்ய கோபிசெட்டிபாளையம் பதிவாளருக்கு மனு செய்து உள்ளார்கள்.
தமிழகத்தில் ஏற்கனவே இதேபோல் ஒரு திருமணம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்று அதன் மூலமாகத்தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி அப்போது திருமணம் செய்தவர்கள் ஒரு திருநம்பி, திருநங்கை. ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக ஒரு பெண்ணும் திருநம்பியும் திருமணம் செய்தது இதுதான் முதல் முறை.
மனித சமூகத்தில் தன்பால் இனத்தவர்கள், இருபால் இனத்தவர்கள், மூன்றாம் பால் இனத்தவர்கள் என மனித உணர்வுகளை கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். ஆண், பெண் என்ற இருபால் உணர்வு, உறவு என்பதை தாண்டி தன் பால் உணர்வு அதேபோல் இவர்களைப் போன்ற மூன்றாம் பாலினத்தவரான திருநம்பியும் பெண்ணும் திருமணம் என்பது இந்திய அளவில் முதல் முறையில் தற்போது நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்திற்கு பல்வேறு சிக்கல்கள் அவர்களின் குடும்பத்தினர் மூலமாக வந்திருக்கிறது. இந்த நிலையில் இதை எதிர்கொண்டு இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்த வழக்கறிஞர் ப.பா. மோகன், சென்னியப்பன், தம்மம் பவுண்டேஷன் திருநங்கை பிரியா உட்பட பலரும் ஒரு நம்பிக்கையை இந்த சமூகத்திற்கு விளைவித்துள்ளார்கள்.