
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். கூலித் தொழிலாளியான இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நேரு நகரைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணிற்கும், ராயக்கோட்டை வஜ்ஜரிப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் இன்று (10/12/2021) காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் திருமணம் நடைபெறவிருந்தது. அதற்காக மணமகளுடன் பெண் வீட்டார் முன்கூட்டியே சென்று விட்டனர். ஆனால் மாப்பிள்ளை தரப்பில் யாரும் அங்கு இல்லை. முகூர்த்த நேரம் நெருங்கும் வரை காத்திருந்தும் மாப்பிள்ளை வரவில்லை. சந்தேகமடைந்த பெண் வீட்டார் மாப்பிளை வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர் மதுபோதையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் மணமகன் வராததால் திருமணம் பாதிலேயே நின்று போனது. அதனால் கோபமடைந்த பெண் வீட்டார், மாப்பிள்ளை மீது மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குடிகார மாப்பிள்ளையை மணக்க தங்கள் வீட்டுப் பெண் தயாராக இல்லை என்றும், திருமண ஏற்பாட்டிற்கான செலவுகளைத் திருப்பி தரும்படி கூறியிருந்தார்.

இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். போதை தெளிந்த மாப்பிள்ளையும் காவல் நிலையத்தில் ஆஜரானார். தவறு செய்து விட்டேன்; இனி குடிக்கவே மாட்டேன் என சத்தியம் செய்ததோடு, பெண்ணை திருமணம் செய்து கொள்வதிலும் பிடிவாதம் காட்டினார். ஆனால் மணப்பெண் லட்சுமியோ அதனை ஏற்கவில்லை.
திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளையின் குடிப்பழக்கம் அம்பலமானதால், தமது வாழ்க்கை காப்பாற்றப்பட்டதாக நிம்மதி அடைந்தார் லட்சுமி. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.