கோவையை கலக்கும் இளம்பெண் டிரைவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு மழை பொழிகிறது. பேருந்தை அசால்ட்டாக வளைத்து ஓட்டும் ஷர்மிளா, ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். பேருந்தை கடந்து வருவோரும் போவோரும் ஒரு நிமிடம் நின்று ஷர்மிளாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டுத்தான் நகர்கின்றனர். காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய ஸ்டார் ஆகிவிட்ட ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை மகேஷ். சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். தன்னுடைய தந்தை டிரைவர் என்பதால், ஷர்மிளாவுக்கு சிறுவயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அதன் நீட்சியாக பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாகவும் கொண்டுள்ளார்.
அதே சமயம், ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என நினைத்த ஷர்மிளாவிற்கு, "உனக்கு எதுல விருப்பமோ அதை செய்" என குடும்பத்தினர் கூறிவிட்டதால், அவரது கனவுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த ஷர்மிளா, 2019 ஆம் ஆண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
அதன்பிறகு, ஷர்மிளா கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றுள்ளார். இதற்கிடையில், ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி பேருந்து ஓட்டுநராக களம் இறங்கிவிட்டார் ஷர்மிளா.
இது குறித்து கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா கூறும்போது, "டிரைவர்னு சொன்னாலே ஒரு மாதிரி தான் பாப்பாங்க. ஆனா, எனக்கு அந்த வேலை மேல தான் ஆர்வம் அதிகமா இருந்துச்சி. அதே சமயம், எந்த துறையா இருந்தாலும் ஒருபடி மேல இருக்கணும்னு ஆசைப்படுவேன். என்னோட அப்பா ஆட்டோ டிரைவர். நான் பஸ் டிரைவர்” என நெகிழ்ச்சியோடு பேசினார் ஷர்மிளா. தற்போது பேருந்து ஓட்டுநராக களத்தில் இறங்கிய ஷர்மிளாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.