சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொள்கின்றனர்.
பாரிஸில் நேற்று நடந்த மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகர் வெங்கலம் பதக்கம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். நேற்று முன் தினம் நடந்த துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதி சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த ரிதம் சங்க்வான், மனு பாகர் ஆகிய இருவரும் பங்கேற்றிருந்தனர். அதில் ரிதம் சங்க்வான் 15வது இடத்தை பிடித்து போட்டியில் இருந்து வெளியேறினார். மறுபுறம் மனு பாகர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், மொத்தம் உள்ள 6 சுற்றுகளில் 600க்கு 580 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று, இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த போட்டியில் தென் கொரிய நாட்டை சேர்ந்த கேம்ஸ் மற்றும் கிம் யெஜி இருவரும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்து பதக்க பட்டியலைத் தொடங்கி வைத்துள்ள வீராங்கனை மனு பாகருக்குப் பிரதமர் மோடி, மக்களைவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என அனைவரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர். பதக்கத்தைப் பெற்றுக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மனு பாகர், “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நான் பங்கேற்ற தோல்வி அடைந்ததால் மிகுந்த மன வேதனை அடைந்தேன்; எனது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா எனக்கு ஆறுதல் கூறி என்னைத் தேற்றினார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவை தற்போது நிறைவேற்றிவிட்டேன்.
பகவத்கீதை அதிகமாகப் படித்துள்ளேன்; அதி நீங்கள் எதற்காக வந்துள்ளீர்களோ, அதைச் செய்யுங்கள் என்று அர்ஜுனனிடம் கிருஷ்ணன் கூறுவார். அதனை நான் நம்புகிறேன்” என்றார். மேலும் இந்த பதக்கம் இந்தியர்கள் அனைவருக்குமானது என்றவர், தாய்நாட்டிற்காகப் பதக்கம் வென்றதில் மிக்க மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.