மன்னார்குடி அருகே பாசன வாய்க்காலின் அளவு குறைவதை நேரில் பார்வையிட வர மறுத்த கிராம நிர்வாக அலுவலரை தாம்பூலத்தில் வாழைபழம் , வெற்றிலை , பாக்கு வைத்து அழைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் வடவாறு வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலின் நீர்பாசனம் மூலம் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பயன்பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் வாய்காலின் இருப்புறமும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதன் தொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். இதை அறிந்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அப்பகுதிக்கு சென்று வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்தார். அப்போது பேரையூர் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனை வடவாறு வாய்க்கால் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அந்த கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆலோசனைக்கு வராததால் டி.ஆர்.பி ராஜா, மன்னார்குடியில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியணை நேரில் சென்று தாம்பூல தட்டில் வெற்றிலை , பாக்கு , வாழைபழம் வைத்து, நாளை ஆய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலரை தாம்புல தட்டு வைத்து ஆய்வுக்கு அழைத்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.