Skip to main content

“இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கூடுதல் நிலம் வேண்டும்” - எம்.பி. கதிர் ஆனந்த்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

“Additional land is needed for the ESI hospital” - M.P. Kadir Anand

 

வேலூர் மாநகரில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி (இ.எஸ்.ஐ) மருத்துவமனையை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று ஆய்வு செய்தார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளிடம் முறையாக சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா என்றும் மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

 

நோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்காக சமைக்கப்படும் உணவுகளை சமையலறைக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள நோயாளிகளையும் சந்தித்து சிகிச்சைகள் சரியாக அளிக்கப்படுகிறதா என எம்.பி கேட்டறிந்தார். ஆய்வுக்குப் பின்னர் எம்.பி கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனை முக்கியமான மருத்துவமனை. இது தொழிலாளர்களுக்காக பிரத்யேகமாக இயங்கி வருகிறது. இ.எஸ்.ஐ மருத்துவமனைகளுக்கென ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து குழு அமைத்து என்ன மேம்பாடுகளைச் செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் அடங்கிய குழுவை அமைத்துள்ளனர். வேலூரில் உள்ள மருத்துவமனை தொழிலாளர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.

 

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். வேலூர் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ளது. இதனால் புதிய மருத்துவமனை அமைக்க மருத்துவமனை நிர்வாகம், ஐந்தரை ஏக்கர் நிலம் கேட்டுள்ளது. அதற்கான பணிகளை துவங்கவுள்ளோம், இடம் ஒதுக்கி தந்தால் அடுத்த ஒரே ஆண்டில் ஒன்றிய அரசு புதிய மருத்துவமனையை கட்டித் தருவதாக கூறியுள்ளது. மத்திய மாநில அரசுகள் இதில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றன. உயர் ரக மருந்துகள் எல்லாம் பதப்படுத்தி வைத்துள்ளனர். இடம் மட்டும் பற்றாக்குறையாக உள்ளது. அதனை மாற்றவே ஆய்வு செய்தேன். இடத்தை விரைவில் தேர்வு செய்ய உள்ளோம்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்