Skip to main content

சிறையில் கணவன்; நிர்க்கதியான மகன்; நிலை குலைந்த குடும்பம்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

Husband in Jail; family passed away

 

எட்டு ஆண்டுகளுக்கு மேல் கணவன் சிறையில் இருக்கிறார். வருமானம் இல்லாமல் வறுமை தாங்கிக்கொள்ள முடியவில்லை என தாயும் மகளும் தூக்கில் தொங்கிய சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

 

நாகப்பட்டினம் காடம்பாடி சவேரியார் கோவில் தெரு, சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜம்புகேசவன். அவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு  அர்ச்சனா (9), ரோகித் (11) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு ஒன்றில் ஜம்புகேசவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 8 ஆண்டுகளாகத் திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார்.

 

மகன் ரோகித் உறவினர் வீட்டில் வளர்ந்து வருகிறான். மகேஸ்வரியும், மகள் அர்ச்சனாவும் காடம்பாடி சவேரியார் கோவில் தெரு சுனாமி குடியிருப்பில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர். அதோடு மகேஸ்வரி நாகை நகராட்சியில் தற்காலிகத் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார். நகராட்சி நிர்வாகமோ ஒப்பந்த பணியாளர்களைக் கடந்த ஓராண்டுகளுக்கு முன் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. வேலை இல்லாமல் போனதால் போதிய வருமானம் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார். மகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தக்கூட வழியின்றி தவித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் மகேஸ்வரி, கடந்த 8ம் தேதி இரவு தனது வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் நீண்ட நேரம் மகளின் எதிர்காலம் குறித்தும், தனக்கு வருமானம் இல்லாமல் போனது குறித்தும் புலம்பியிருக்கிறார். பிறகு மகளுடன் உறங்கப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்துவிடும் மகேஸ்வரி நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், மகேஸ்வரியின் சகோதரி அமுதாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

 

இந்தத் தகவலைக் கேட்டு, பதறித் துடித்து ஓடி வந்த அமுதா கதவைத் திறந்து பார்த்துள்ளார். அங்கு மகேஸ்வரி, மகள் அர்ச்சனாவை சேலையால் தூக்கிட்டு கொலை செய்துவிட்டு தானும் அதே சேலையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இதனைக் கண்டதும் அமுதா, அரண்டு துடித்து வெளியே ஓடி வந்திருக்கிறார். 

 

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வெளிப்பாளையம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

தாய் மகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் நாகையில் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்