மன்னார்குடியில் ரூ. 1.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குளத்தின் சுற்றுச்சுவர் நான்கு நாட்களிலேயே சரிந்து விழுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி நிதியினை ஒதுக்கி அரசாணை வெளியிட்டார். மேம்பாட்டு நிதியின் கீழ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடி நிதியில் நகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் தொலைநோக்கு சிந்தனையோடு நகரம் முழுவதும் உள்ள முக்கியமான குளங்களைத் தேர்வு செய்து பணிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் தாமரைக்குளம் ரூ. 2.20 கோடி மதிப்பீட்டிலும், ருக்குமணி குளம் ரூ.1.24 கோடி, செங்குளம் ரூ. 82.15 லட்சம், அண்ணாமலை நாதர் கோவில் குளம் ரூ. 75 லட்சம் என 4 குளங்கள் சுமார் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு குளத்தின் கரைகளைச் சுற்றி நவீன முறையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ருக்குமணி குளத்தின் கரைகளைச் சுற்றி சுற்றுச்சுவர்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியில் பதிக்கப்பட்டிருந்த கற்கள் முழுவதும் சரிந்து விழுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே அந்தப் பணிகள் தரமின்றி நடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்த போதிலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு இந்த நிலைக்கு வந்துள்ளது எனக் கூறுகின்றனர். ஒப்பந்ததாரர் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறுகையில், “கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ருக்குமணி குளம் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஒரு பக்கத்தில் கற்கள் சரிந்துள்ளது. தகுதியில்லாத ஒப்பந்ததாரர்களும், முன்னனுபவம் இல்லாதவராக சப் காண்ட்ராக்டரும் இருப்பதே இந்தப் பாதிப்புக்குக் காரணம். அனுபவம் உள்ளவர்களுக்குப் பணியை வழங்க வேண்டும். மக்களின் வரிப் பணத்தை இப்படி விரயம் செய்யக் கூடாது. ஆரம்பம் முதலே இந்தப் பணிகள் தரமாக இல்லை. சில குளங்களுக்குப் போடப்பட்டுள்ள திட்ட மதிப்பீடு(Estimate) அதிகம். அதிகாரிகள் வேலை நடைபெறும் இடங்களில் முறையாக ஆய்வு செய்வதில்லை. இந்தப் பணியில் அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரர்கள் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ளவில்லை. ஒப்பந்த விதிகள் மீறப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பதிக்கப்படும் கற்கள் தரமாக இல்லை" எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.