மேகதாது விவகாரத்தைப்பற்றி சிந்திக்காமல் குப்பையில் போட்டுவிட்டு பதவியை பங்குபோட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் தமிழக அரசியல்வாதிகள் என குற்றம் சாட்டியுள்ளார் மணியரசன்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, " கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே 9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட உள்ளது. அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்து விட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய நீர்ப்பாசன துறை அதிகாரிகள் கர்நாடக மாநிலத்துக்கு சென்று இடத்தை பார்வையிட்டு ஒப்புதல் வழங்கி உள்ளனர். இதனால் சுமார் 70 ஆயிறம் டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசால் தேக்கிவைக்க முடியும். அந்த மாநிலத்துக்கான நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார், ஐந்து ஆண்டுகளுக்குள் மேகதாது அணையை கட்டி விடுவோம் எனவும் உறுதிபட தைரியமாக கூறியுள்ளார்.
அவ்வாறு செய்தால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது, காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இதைப் பற்றி கவலை கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு நேரமில்லை. மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவோ அதனைப் பற்றி பேசவோ நேரமில்லாமல், தேர்தலை குறிவைத்து நகர்கின்றனர். இதுபற்றி எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் சிந்திக்காமல் பதவியை பங்கு போட்டுக்கொள்வதில் நேரத்தை ஒதுக்கி கொள்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து யாருக்கு பதவி கிடைக்கும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பதவியை பங்குபோடுவதிலேயே தமிழக தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர். கர்நாடக அரசோ சுயநலத்தோடு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு மக்கள் முன்வரவேண்டும்."என்றார்.