மணிப்பூர் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் என்று தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாகக் கலவரம் நடைபெற்று வருகிறது. இதை வெளியிலிருந்து பார்க்கும்போது, இரு சமூகத்தினருக்கு இடையே நடைபெற்று வரும் மோதல் போன்றே தெரியும். ஆனால், உண்மையில் அங்கு குக்கி இனக் கிறிஸ்தவ மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மெய்தி இன மக்கள் வாழும் பகுதிகளிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகக் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சில குழுக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறி வைத்துச் சேதப்படுத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவங்களில் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல இந்து கோயில்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தருணத்தில் அரசு மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மீண்டும் பழைய மணிப்பூர் மாநிலம் உருவாகப் பொருளாதார ரீதியாக எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இருப்பினும் நடந்த கலவரங்களைக் கண்டித்தும், அரசு தலையிட்டு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
பேட்டியின் போது மதுரை பேராயர் அந்தோணிபாப்புசாமி, ஆயர்கள் அந்தோணிசாமி(பாளையங்கோட்டை), ஆரோக்கியராஜ்(திருச்சி மாவட்டம்), தமிழக துறவியர் பேரவைத் தலைவர் வேளாங்கண்ணி ரவி, மான்ஃபோர்ட் சகோதரர்கள் சபை மாநிலத் தலைவர் சகோதரி இருதயம், திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அந்துவான், வழக்குரைஞர் மார்ட்டின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.