வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் இன்று இரவு முதல் அதிகாலைக்குள் மகாபலிபுரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலிருந்து தென்கிழக்கில் 180 கிலோமீட்டர் தொலைவில் தற்போது மையம் கொண்டுள்ள மாண்டஸ் மாலைக்கு பிறகு இன்னும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னையை நோக்கித் தொடர்ந்து மாண்டஸ் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே புயல் கரையைக் கடக்கும் என்பதால் பொதுமக்கள் இன்று மாலையில் இருந்தே தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக புறநகர் ரயில்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் இயக்கப்படும் பட்சத்தில் 10 முதல் 15 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.