![manaparai](http://image.nakkheeran.in/cdn/farfuture/HbhoQNMyJMmavrf70Yh4Ij54D4Jj3vXYT1jlYdmkGYE/1609508899/sites/default/files/inline-images/reyre64356.jpg)
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சந்தைப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹபிபா பீவி. 68 வயதான இவர், தனியாக வசித்து வருவதோடு வெளியில் சென்று சேலை வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று இரவு வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஹபிபா பீவி, இன்று நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குச்சென்று பார்த்தபோது வீடு முழுவதும் ரத்தம் படிந்து கிடந்துள்ளது.
மூதாட்டி நிர்வாண நிலையில், கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, கைரேகை மற்றும் தடயங்களைச் சேகரித்தனர். இதுமட்டுமின்றி மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர், இறந்த மூதாட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி எதற்காக கொலை செய்யப்பட்டார்? நிர்வாண நிலையில் இருப்பதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த செயினும் திருடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.