மானாமதுரை அருகே நடந்த கோஷ்டி மோதலில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக ஆக உயர்ந்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள திருப்பாச்சேத்தியை அருகிலுள்ள ஆவரங்காடு - கச்சநத்தம் கிராமங்களைச் சேர்ந்த இரு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 28ஆம் தேதி நடந்த கோவில் திருவிழாவில் இருபிரிவினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் கச்ச நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். சுகுமார், மலைச்சாமி, தனசேகரன், மகேசுவரன், சந்திரசேகர், தேவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் (வயது 34) இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இன்னும் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.