கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே அமைந்துள்ளது நந்தனார் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 50 வயது மதிக்கத்தக்க இவர், தான் வசிக்கும் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, தனது கடையில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து, போலீசாருக்கு தெரியாமல் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், இதில் வரும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.
இந்நிலையில், அதே நந்தனார் காலனியைச் சேர்ந்தவர் கணேசன். கோவையில் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரும் டீக்கடை வைத்திருக்கும் மணிகண்டனும் நண்பர்களாக இருந்து வந்தனர். மணிகண்டன் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும்போது கணேசன் அவருக்கு உதவியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் தனது நண்பனான மணிகண்டனின் டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மணிகண்டனிடம் கணேசன் மது கேட்டுள்ளார். ஆனால், ‘சரக்கெல்லாம் கொடுக்க முடியாது. பணம் கொடுத்தா மட்டும்தான் கொடுக்க முடியும்’ எனக் கறாராக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், இந்த வாக்குவாதம் முற்றி மணிகண்டனும் கணேசனும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பினர். ஆனால், கணேசனுக்கு மணிகண்டன் மீது ஏற்பட்டிருந்த கோபம் நிலையாக இருந்துள்ளது. இந்நிலையில், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் மணிகண்டனின் தொழிலை தடுக்கும் விதமாக மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், நந்தனார் காலனி பகுதியில் உள்ள மணிகண்டன் கடையை அகற்றக் கோரி பொள்ளாச்சி நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட அதிகாரிகள், மணிகண்டன் கடையை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அப்போது, தனது கடையை அகற்றுவதற்கு கணேசன்தான் காரணம் என நினைத்துக்கொண்ட மணிகண்டன், அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி மாலை கணேசன் தனது வேலையை முடித்துக்கொண்டு வழக்கம்போல் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென குறுக்கே வந்த மணிகண்டன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திடீரென ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த ரீப்பர் கட்டையால் கணேசனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.
ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் படுகாயமடைந்த கணேசனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, முன்விரோதத்தால் கணேசனை தாக்கிய மணிகண்டனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு, மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுவால் ஏற்பட்ட தகராறில் நண்பனை ரீப்பர் கட்டையால் அடித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.