
திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் தன்னுடைய விரோதியை மின்சாரம் பாய்ச்சி கொள்ள முயன்றவர், மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ளது சொரகொளத்தூர் என்ற கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் சரண்ராஜுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், தன்னுடைய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மாட்டுக்கொட்டகையில் சரண்ராஜ் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை, சரண்ராஜை கொலை செய்ய முயற்சி செய்து மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏழுமலையை மின்சாரம் தாக்கியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரைக் காப்பாற்ற ரேணுகோபால் என்பவர் முயற்சிக்க, அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதையடுத்து, ஏழுமலை மற்றும் ரேணுகோபால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கலசப்பாக்கம் காவல்துறையினர் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.