மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சாமிதுரை மகன் காசிநாதன்(60). இவர் செவ்வாய்க்கிழமை மாலை சிதம்பரம் அரசு மருத்துவமனை எதிரில் நடந்து வரும் பொழுது மாடு முட்ட வந்துள்ளது. மாட்டிற்கு பயந்து காசிநாதன் சாலையின் பக்கம் நகர்ந்த போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் இடுப்பில் காயமுற்ற காசிநாதனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்து இறந்து விட்டதாகத் தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இதுகுறித்து நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரம் பகுதியில் ஒவ்வொரு தெருக்களிலும் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகத் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தில் கூறியும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் சரியாக எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தவரை மாடு முட்டி பலத்த காயம் ஏற்பட்டதால் மாடுகளைப் பிடித்து அடைப்பது போல் செய்தனர். பின்னர் அடுத்த நாளே சிதம்பரம் நகரத்தின் முக்கிய இடமாக உள்ள கீழவீதி கோவிலுக்கு எதிரே, காந்தி சிலை பகுதி, மேல வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாடுகள் சுற்றித் திரிந்து பொதுமக்களை முட்டி வருகிறது. இது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் நகராட்சி நிர்வாகம் இருந்து வருவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து குற்றச்சாட்டு வருகிறது.
மேலும் கடந்த வருடம் தெருவில் படுத்திருந்த மாட்டால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் செவ்வாய்க்கிழமை மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ? என்ற அச்சமும், பயமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.