சென்னை, ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். 49 வயதான இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உதவியாளராக அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(48) என்பவர் வேலை செய்து வருகிறார். இருவருமே சுற்று வட்டாரப் பகுதிகளில் பிளம்பர் பணியைச் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் பிளம்பிங் வேலை செய்வதற்காக ரமேஷை வேலைக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து, அன்றைய தினமே ரமேஷ் தனது உதவியாளர் சுரேஷை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் சோழபுரம் நரேஷ் தெருவில் உள்ள அக்ஸயா அடுக்குமாடிக் குடியிருப்பில் பிளம்பிங் வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார். அங்கு வேலைகளைச் செய்து கொண்டிருக்க, அடுக்குமாடிக் குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் வைத்திருந்த மின்மோட்டார் பழுதானது தெரியவந்துள்ளது. இதனை, தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகத்தினரிடம் சொல்ல, அவர்கள் அதனைச் சரிசெய்ய வேண்டும் என சொல்லியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கழிவுநீர் தொட்டியில் வைத்திருந்த மின்மோட்டாரை சரிசெய்ய சுரேஷ் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார். அந்த சமயம் ரமேஷ் 'பிளம்பிங்' பொருட்கள் வாங்க சென்ற நிலையில், அதற்குள் சுரேஷ் மோட்டாரை சரி செய்து மீண்டும் தொட்டிக்குள் பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக சுரேஷை விஷ வாயு தாக்க மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, 'பிளம்பிங்' பொருட்கள் வாங்கி வந்த ரமேஷ் தொட்டிக்குள் பார்த்தபோது சுரேஷ் மயக்க நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, தொட்டிக்குள் இறங்கி சுரேஷை மீட்க முயற்சித்துள்ளார். அப்போது, அவரும் விஷ வாயு தாக்கி மயங்கி உள்ளார்.
இதையடுத்து, இருவரும் தொட்டிக்குள் சிக்கியதைக் கண்ட தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் உடனே தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருமுல்லைவாயல் போலீஸார் கழிவுநீர் தொட்டியில் இறங்கி இருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், ரமேஷ் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரமேஷின் அண்ணன் ராஜேஷ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகத்தினரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையில், கழிவுநீர் தொட்டியில் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழந்த சுரேஷ் என்பவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, திருமுல்லைவாயலில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த ஆணையர், ''விஷவாயு தாக்கிய தொட்டி சமையலறை, குளியலறை தண்ணீரை தேக்கி வைக்கும் தொட்டி. நடந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது'' எனத் தெரிவித்தார்.