Skip to main content

''மேன் ஈட்டரா டி23'' -ஒரு புலி எப்பொழுது 'ஆட்கொல்லி' ஆகிறது?

Published on 01/10/2021 | Edited on 02/10/2021

.

'' Man eater D23 '' - When is a tiger a man eater

 

நாட்டின் தேசிய விலங்கான புலி, தேசிய விலங்காக இருந்தாலும் குறைந்து வரும் விலங்குகள் பட்டியலில் முக்கியமானதொன்றாக இருக்கிறது. புலி வனச்சூழல் சங்கிலியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. 14 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.

 

புலி மட்டுமல்லாது யானைகள், கரடி உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது மனித நடமாட்டம் உள்ள பகுதிகளுக்குச் சென்று விளைநிலங்களை நாசமாக்குவது, மனித உயிர்ச் சேதங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் என்பது நடந்த வண்ணமே இருக்கிறது.  இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த 'டி23' புலியைப் பிடிக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அந்த புலியைப் பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது. இதுவரை 4 மனித உயிர்கள், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை இந்த புலி கொன்றுள்ளது. கடந்த ஏழு நாட்களாக வனத்துறைக்குப் போக்கு காட்டி வந்த 'டி23' புலியை இறுதியில் சுட்டுக்கொல்ல வனத்துறையின் முதன்மை வனத்துறை அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார். காரணம் மேன் ஈட்டராக மாறிவிட்டதா டி23 என்ற அச்சம்தான்.

 

'' Man eater D23 '' - When is a tiger a man eater

 

விலங்குகளை வேட்டையாடி உண்ணும் புலி பொதுவாகவே மனிதர்களைக் கண்டால் விலகி ஓடும் சுபாவத்தைக் கொண்டது. புலிகள் பொதுவாகக் கூச்ச சுபாவம் கொண்டவையாகவே இருக்கும். மனிதர்களைப் பார்க்கும் எல்லா நேரமும் புலி மனிதர்களைத் தாக்குவதில்லை. அதற்கான அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே தற்காப்பிற்காக மனிதனாக இருந்தாலும் சரி விலங்காக இருந்தாலும் சரி தாக்க முயலும். ஆனால் புலிகள் மனித ரத்தத்தைச் சுவை பார்த்துப் பழகிய பிறகே 'மேன் ஈட்டர்' எனும் ஆட்கொல்லி புலியாக மாறுகிறது. பொதுவாக வயது அதிகமான அல்லது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக வேட்டையாடத் திறன் இல்லாத புலிதான் மனிதர்களைத் தாக்கி சுவைக்கும் ஆட்கொல்லி புலியாக உருவெடுக்கிறது. 

 

TIGER

 

தமிழகத்தில் 2014, 2015, 2016 வருடங்களில் ஆட்கொல்லி புலியாக அடையாளம் காணப்பட்ட 3 புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் 'ஆவ்னி' என்ற பெண் புலி மேன் ஈட்டர்  புலிகளிலேயே மிகவும் பிரபலமானது. ஆட்கொல்லி புலிகளைக் கொன்றுதான் விட வேண்டும் என்றும் இல்லை. வால்பாறையில் 1997 ஆம் ஆண்டு ஆட்கொல்லி புலியாகச் சுற்றி வந்த புலி ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டு இறுதிவரை பராமரிக்கப்பட்டது.

 

TIGER

 

கடந்த ஏழு நாட்களாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் வனத்துறையினருக்குப் போக்குகாட்டி வரும்  டி23 புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு இன்று ஒருவரைக் கொன்றதால் புலியைச் சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று, முன்பு கொல்லப்பட்ட 3 பேரையும் அந்த புலி உணவாக உட்கொள்ளவில்லை. ஆனால் நான்காவது நபராக இன்று கொல்லப்பட்டவரைப் புலி உண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  தற்போது எஸ்டேட்டை அச்சுறுத்தி வரும் புலிக்கு வயது 13. மேலும் உடலில் காயங்களோடு இந்த புலி சுற்றி வருவதால் ஆட்கொல்லி புலியாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வண்டலூர் பூங்காவிற்குக் கொண்டுசென்று பராமரிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த வனத்துறையின் முயற்சி தோல்வியில் முடிய, தற்பொழுது 'டி23' ஐ சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்