விழுப்புரம் அருகே விவசாயி ஒருவர் தன்னுடைய விவசாய நிலத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அருகில் உள்ளது தாழம்குணம் கிராமம். இந்தப் பகுதியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த கோவிந்தசாமி (60) என்பவருக்குச் சொந்தமாக இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள விளை பயிர்களைக் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இரவில் புகுந்து சேதப்படுத்தி வந்தன. இதைத் தடுக்கும் நோக்கத்தில் கோவிந்தசாமி தனது நிலத்தைச் சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார். இரவு நேரத்தில் மட்டும் அந்த மின் வேலியில் மின்சாரத்தை இணைத்து விடுவார். காலையில் அதை அப்புறப்படுத்தி விடுவார்.
வழக்கம்போல நேற்று முன்தினம் மின்சார வேலியில் சென்று கொண்டிருந்த மின்சாரத்தை நிறுத்துவதற்காக நேற்று காலை கோவிந்தசாமி நிலத்துக்குச் சென்றார். அங்கே எதிர்பாராதவிதமாக அவர் போட்டிருந்த மின்சார வேலியில் அவரே தவறிவிழுந்து சிக்கிக்கொண்டார். அவர்மீது மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் தகவல் அறிந்த அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கோவிந்தசாமி சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.