விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் உள்ளது நான்குமுனை சந்திப்பு. சென்னை, திருச்சி, புதுச்சேரி, திருக்கோவிலூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் சாலைகளின் சந்திப்பில் உள்ளது இந்தப் பகுதி. இந்த இடம் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக உள்ளது. போக்குவரத்தை சீர்படுத்த அங்கு சிக்னல் உள்ளது. இந்தப் பகுதியில்தான் நகரின் மேற்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.
இப்படிப்பட்ட இந்தப் பகுதியில் நேற்று (24.08.2021) காலை ஒருவர் மது போதையில் சாலையின் நடுவே அங்குமிங்கும் நடந்து சென்றுகொண்டு, பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். சிக்னல் அருகே ரகளையில் ஈடுபட்டவர் பற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மது போதையில் இருந்த அந்த மனிதர் அவர்களிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வாகனங்களுக்கு இடையூறாக சாலையில் நின்றுகொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து மேற்கு காவல் நிலைய போலீசார் அவரிடம் பேச்சுக் கொடுத்தபடி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில், அவர் அருகில் உள்ள கல்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பதும் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் வெங்கடேசன் மீது வழக்குப் பதிவுசெய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.