விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது வெடிக்க உள்ளதாக மர்ம நபர் ஒருவர் அவசர போலீஸ் 100 என்ற எண்ணிற்கு தகவல் அளித்துள்ளார். மேலும் விவரங்கள் எதுவும் கூறாமல் அழைப்பை துண்டித்ததால், சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விழுப்புரம் நகர காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொன்ன மர்ம நபரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் அகரம்பாட்டை பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை பைபாஸ் பகுதியில் முத்தாம்பாளையம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த விமல்ராஜை போலீசார் மறித்து சோதனை நடத்தியுள்ளனர். வாகனத்தின் ஆவணங்களை போலீசார் கேட்க, வீட்டில் இருப்பதாக விமல்ராஜ் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார், வீட்டில் இருக்கும் ஆவணங்களை எடுத்துவந்து காட்டிவிட்டு வாகனத்தை எடுத்து செல் சென்று கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விமல்ராஜ் வீட்டிற்கு சென்று ஆவணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு போலீசார் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக போலீசாரை அலைக்கழிக்க விட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது செல்போன் மூலம் அவசர போலீஸ் 100க்கு போன் செய்து விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார் என்பது தெரியவந்தது.
உடனடியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விமல்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விழுப்புரம் நகரில் பரபரப்பான பஸ் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாகப் பரவிய தகவல் நகர மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.