தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் எழுபதாவது பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று தொண்டர்களைச் சந்திக்க இருக்கிறார். அண்ணா அறிவாலயத்தில் கூடும் தொண்டர்களுக்கு மஞ்சப்பையில் மரக்கன்றுகளை கொடுக்க இருக்கிறார். 70 ஆவது பிறந்தநாள் என்பதால் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சென்னைக்கு வந்துள்ளனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுனா கார்கே முதல் முறையாக தமிழகத்துக்கு வர இருக்கிறார். பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டம் வர இருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த அடித்தளத்திற்கு வித்திடும் எனக் கூறப்படுகிறது.