திண்டுக்கல் அருகே உள்ள நான்கு வழிச்சாலை பைபாஸ் ரோட்டின் நடுவே ஆண் பிணம் ஒன்று ரத்த காயங்களுடன் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி அருகே மதுரை பெங்களூர் செல்லும் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த நான்கு வழிச்சாலை நடுவில் தடுப்பு சுவற்றில் அடையளம் தெரியாத ஆண் பிணம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக தாடிக்கொம்பு போலிசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து ஜஸ்டின் பிரபாகரன், தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினர்.
அதன்பின் அந்த பிணத்தை ஆய்வு செய்தபோது அவர் வைத்திருந்த ஒரு ரசீதின் அடிப்படையில் கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த முரளி 35/19 என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல் ஆய்வு செய்தார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் லின்டா வரவழைக்கபட்டு. சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்காமல் நின்று விட்டது. கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
இறந்து கிடந்தவர் கொடைக்கானல் சுற்றுலா ஏஜென்ட் என்பது தெரியவந்தது. இறந்தவரின் உடலில் தலையின் பின் பகுதியிலும் நெஞ்சு பகுதியிலும் பலத்த காயங்கள் காணப்பட்டன எனவே இது கொலையாக இருக்குமோ? அல்லது விபத்தா என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இப்படி நான்கு வழி பைப்பாஸ் ரோட்டில் பட்டம் பகலில் ஒருவர் பிணமாக கிடந்தது அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.