தமிழக முதல்வர் தர்மபுரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவி தொடங்கி வைப்பதற்காக செல்லவிருக்கும் நிலையில் சேலம் ஓமலூர் விமான நிலையப் பகுதியில் ட்ரோன்கள் பறக்க நேற்றே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
'மக்களுடன் முதல்வர் திட்டம்' இன்று தமிழக முதல்வரால் தர்மபுரியில் உள்ள ஊரகப் பகுதிகளில் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. தர்மபுரி பாளையம்புதூரில் இன்று காலை 11.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். தமிழகத்தில் மொத்தமுள்ள 12,500 ஊராட்சிகளில் அடுத்தடுத்து 2500 முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல் சேலம் கோட்டத்தில் பெண்களுக்காக 20 பேருந்துகளை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.
முதல்வரின் வருகை காரணமாக சேலத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்க இருப்பதால் காலை 8:30 முதல் நண்பகல் 1:30 வரை கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓசூர், கிருஷ்ணகிரியில் இருந்து மொரப்பூர், அரூர், காரிமங்கலம் வழியாக சேலம் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி, பெங்களூர் செல்லும் கனரக வாகனங்கள் அரூர் வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரியில் இருந்து இலகு ரக வாகனங்கள் பொம்மிடி, தீவட்டிப்பட்டி வழியாக சேலத்திற்கு செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.