தமிழகத்தில் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ‘டார்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு மட்டும் ‘டார்ச் லைட்’சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் 'டார்ச் லைட்' சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி முறையீடு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து விரைவில் முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'டார்ச் லைட்' சின்னத்தை போராடி பெறுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் கட்சி 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.