விருதுநகர் மாவட்ட வாட்ஸ்-அப் குழுக்களில் ஆடியோ ஒன்று அதிமுக வட்டாரத்திலிருந்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. ஒருவர் பதற்றத்துடன் செல்போனில் பேசும் அந்த ஆடியோவில் “ஒரு லட்ச ரூபாய் வாங்கிக்கிட்டாங்க.. அமைச்சர் பி.ஏ. கேட்டதா சொல்லி வாங்கிட்டாங்க.. அப்புறம் நான் சொல்லல.. நீ சொல்லலன்னு கடைசில ஜட்ஜுகிட்ட கூட்டிட்டு வந்துட்டாங்க.. இப்ப என்னை ஜெயிலுக்குள்ள தள்ளிருவாங்க போல. எனக்கு இப்ப படபடன்னு வருது. அருப்புக்கோட்டை ஜட்ஜ் வீட்டுக்கு போய்க்கிட்டிருக்காங்க அண்ணே.. ஒரு லட்சம் வாங்கிட்டு போய்ட்டாங்க அண்ணே..” எனக் குமுறுகிறார் அந்த நபர்.
என்ன விவகாரம் இது?
விருதுநகரை அடுத்துள்ள பட்டம்புதூரில் வெடிபொருள் தடுப்பு சம்பந்தமாக விருதுநகர் மேற்கு காவல்நிலைய (சூலக்கரை பொறுப்பு) ஆய்வாளர் மாரியப்பன் ரோந்து சுற்றி வந்தபோது, ஸ்ரீசிவராஜ் பைரோடெக் நிறுவனத்தின் அருகில் வேப்ப மரத்தடியில் அனுமதியின்றி விதிமீறலாக 6 பேர் ஃபேன்சி ரக வெடியான 200 ஷாட் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். உடனே காவல் ஆய்வாளர் மாரியப்பன், அந்தப் பட்டாசு ஆலை உரிமையாளரான ராஜமாணிக்கத்திடம் பட்டாசு ஆலை உரிமத்தை வாங்கிப் பார்த்தபோது, ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்கு அந்தப் பட்டாசு ஆலைக்கு அனுமதியில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. மனித உயிருக்கும் உடைமைக்கும் ஊறு விளைவிக்கும் எனத் தெரிந்தும், பட்டாசு ஆலையின் உரிமத்தை மீறியும், அரசு அனுமதியை மீறியும் வெடிபொருட்களை அவர்கள் உற்பத்தி செய்ததால், உரிமையாளர் ராஜமாணிக்கத்தையும், போர்மேன் கந்தசாமியையும் உடனடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் முத்து ஈஸ்வரன், பாலமுருகன், கருப்பசாமி, ரவிகுமார் ஆகியோர் மீது சூலக்கரை காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர்களில் ஒருவர் யாரையோ தொடர்புகொண்டு, “அமைச்சர் பி.ஏ.க்கு ரூ.1 லட்சம் கொடுத்தால் வழக்கிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறி, ரூ.1 லட்சத்தை என்னிடமிருந்து ஒருவர் வாங்கினார். ஆனால், எங்கள் மீது வழக்குப் பதிவாகி, நீதிபதியிடம் அழைத்துச் செல்கிறார்கள்.” என்று பேசியிருக்கிறார்.
நாம் சம்பந்தப்பட்ட அமைச்சரின் உதவியாளர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது “இப்படி ஒரு விஷயம் நடந்தது அமைச்சருக்கே தெரியாது. அந்த நபர் கூறுவதுபோல் அமைச்சரின் உதவியாளர் யாரும் அப்படி பணம் வாங்கவில்லை. அந்த நபர் யாரிடம் பணம் கொடுத்து ஏமாந்தாரோ? ஆனாலும்.. அந்த ஆடியோவை சுற்றலில் விட்டிருக்கிறார்கள்” என்று வருத்தப்பட்டார்.
நம்மிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் “பட்டாசு ஆலைகளின் விதிமீறலால் விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. அதனால், அரசுத்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்படியிருக்கும்போது, காவல்துறையிடம் சிக்கிய ஒருவரை அமைச்சரின் உதவியாளர் எப்படி காப்பாற்ற முயல்வார்? ஆனாலும், அமைச்சரின் உதவியாளர் பெயரில் யாரோ பணம் வாங்கியிருப்பதுபோல் தெரிகிறது. இதுகுறித்து விசாரிக்கப்படும்” என்றார்.