துர்நாற்றத்துடன், குப்பை கூளங்களில் சிக்கி தவிக்கின்றது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் அஸ்திக்கல்.! "நாற்றத்தோடு இருந்தாலென்ன..! பார்க்கலாம்.!" என இன்று வரை இதனை சரி செய்ய முன்வரவில்லை தமிழக அரசு என குற்றஞ்சாட்டுகின்றனர் சர்வோதய சங்கத்தினர்.
1948- ஆம் ஆண்டு ஜனவரி 30- ஆம் தேதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி இந்தியாவெங்கும் நிறுவப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் திருச்சி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூர் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டது.
இங்கு காந்தியின் அஸ்தி வந்த கதை சுவாரசியமானது. சங்கரன்கோவில் அருகிலுள்ள கரிவலம் வந்த நல்லூரில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் நிட்சேப நதி கரைபுரண்டோடிய காலம் உண்டு. காசிக்கு நிகரான இவ்விடத்தில் காந்தியின் அஸ்தி வைத்தால் மிகவும் நன்று எனக் கருதிய காங்கிரஸ் தொண்டர்கள் கரிவலம் வந்த நல்லூரில் காந்தியின் அஸ்தி வரவேண்டுமென கடிதம் எழுதி காத்திருக்க, தமிழ்நாட்டிற்கு காந்தியின் அஸ்தி கொண்டு வரப்பட்டது.
ரயிலில் கொண்டு வரப்பெற்ற அஸ்தியினை யானை மீது வைத்து ஊர்வலம் நடத்தி, திருமுறை பாடி 1948- ஆம் ஆண்டு பிப்ரவரி 12- ஆம் தேதி அஸ்தியினை அங்குள்ள நிட்சேப நதியில் கரைத்தனர். இடையினில் 4-4-1957ம் ஆண்டு அங்கு வந்த வினோபா அடிகள் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தினில் நினைவுக்கல் நட, தற்பொழுது வரை அவ்விடத்தினை மகாத்மா காந்தியாகவே வழிப்பட்டு வருகின்றனர் சர்வோதயா சங்கத்தினர்.
இது இப்படியிருக்க, ஊரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கு தான் குவிக்கப்பட்டு வருவதால் குப்பை கூளங்களின் நடுவில் துர்நாற்றத்தில் சிக்கியுள்ளது மகாத்மா காந்தி அஸ்திக்கல். இதனை பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை." என குற்றஞ்சாட்டுகின்றனர் சர்வோதய சங்கத்தினர். இருப்பினும், அரசு கைக்கொடுக்காவிடில் தாங்களே அவ்விடத்தை சுத்தம் செய்து வழிப்பாட்டிற்கு உகந்த நிலையில் மாற்றவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் அவர்கள்.