உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்று பரவாமல் தடுக்க இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் முறையான அரசு அனுமதியுடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அந்த அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 18 பேர், சிவகங்கையைச் சேர்ந்த 21 பேர் என 41 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்து வந்துள்ள நிலையில், ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊர்களுக்குப் புறப்பட முடிவு செய்து சேலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஒரு பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
இதில் திருச்சியில் 2 பேர் இறங்கினர். பிறகு இலுப்பூரில் சிலர் இறங்குவதற்காக பஸ் நிறுத்தப்பட்ட போது, அங்குச் சோதனையில் இருந்த அதிகாரிகள் அவர்களைப் பரிசோதனை செய்துள்ளனர். அதில் 5 பேருக்கு உடல் வெப்பநிலை அதிகமாக இருந்ததால், அவர்களை வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்காமல் இலுப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை இலுப்பூரில் தங்க வைக்க எதிர்ப்புத் தெரிவித்ததுடன், புதுக்கோட்டையில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ராணியார் மருத்துவமனை, பழைய மாவட்ட மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் வலியுறுத்தியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரில் 3 பேர் மட்டுமே இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனாலும் வெளிமாநிலத்தில் இருந்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அவர்களைச் சில நாட்கள் மட்டும் தங்க வைத்து பரிசோதனைகள் செய்து அவர்களை வீட்டிற்கு அனுப்ப இருக்கிறோம் என்று சமாதானம் பேசினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 18 பேரும் இலுப்பூர் அரசு மகளிர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.