தமிழகத்தில் எச்.ராஜா வம்பிழுக்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்குப் பத்திரிக்கையாளர்கள் தொடங்கி திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம் என எல்லா கட்சிகளோடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். மேலும், காவல்துறை, நீதித்துறை, அறநிலையத்துறை பணியாளர்களையும் அவதூறாகப் பேசி வருகிறார். இருந்தாலும் பா.ஜ.க. தேசிய செயலர் என்பதால், எச்.ராஜாவின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாத தமிழிசை, தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடும் என்கிற பொறாமையில் மற்றவர்கள் பொங்குவதாகப் பேட்டியளித்து வருகிறார்.
கடந்த ஜூலை 30-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடியை, தமிழ் பத்திரிக்கை ஊடக ஜாம்பவான்கள் மற்றும் டிவி நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதற்கு ஏற்பாடு செய்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், பொன். ராதாகிருஷ்ணனும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், பத்திரிக்கைகளில் இந்தச் செய்தி வெளியாகவில்லை. மோடியும் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யவில்லை. ஆனாலும், ஒரு வாரத்திற்குப் பிறகு சமூக வலைத் தளங்களில் புகைப்படம் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது, தேர்தல் நெருங்கி வருவதால், ஊடகங்களின் ஆதரவைப் பெறுவதற்கு அந்தச் சந்திப்பு நடந்ததாகச் சொல்லப்பட்டது. உண்மையும் அதுதான்.
சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, “4 ஆண்டுகளில் தமது அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். அது தொடர்பான விமர்சனங்களையும் பதிவு செய்யுங்கள், குறை இருப்பின் எமது அரசாங்கத்தை விமர்சிக்கவும் தயங்காதீர்கள்” என மோடி சொன்னதாக, அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர் விஷயத்தை ‘லீக்’ செய்தார்.
சந்திப்பு நடந்து ஒன்றரை மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களைத் தொடர்பு கொண்ட மத்திய அரசுத் தரப்பு, பிஜேபி தொடர்பாக தாங்கள் வெளியிட்ட செய்திகளைப் பதிவு செய்து தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. அதற்கு குறிப்பிட்ட ஒரு ஊடகம் ‘இங்கேதான் தமிழிசை, எச்.ராஜா, எஸ்.வி.சேகர், கருப்பு முருகானந்தம் போன்றோர் மக்களிடம் ரொம்ப நல்ல பெயர்(?) வாங்கி வச்சிருக்காங்களே! இதுல நாங்க எங்கே பிஜேபிக்கு ஆதரவான செய்திகள் வெளியிட்டிருக்க முடியும்? வேண்டுமானால், மோடி பிறந்தநாளில் 68 பேருக்கு மூக்குக் கண்ணாடி கொடுத்தாங்க. அந்த நிகழ்ச்சியில் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி கலந்து கொண்டார். இது மட்டும்தான் உருப்படியாக நடந்திருக்கிறது‘ என்று, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பை அனுப்பி வைத்திருக்கிறது ஒரு செய்திச் சேனல்.
‘தாமரை மலர்ந்தே தீரும்!’ என்ற தமிழிசையின் பேச்சை, தமிழகத்தில் பலரும் காமெடியாகப் பார்த்து அலுத்துப்போன விஷயம், மோடி வகையறாக்களுக்கு இன்னும் தெரியாது போலும்!