Skip to main content

கொள்ளிடம் ஆறு குப்பைகளின் கூடாரமாக மாறுகிறது - விவசாயிகள் வேதனை

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Kollidam River  becomes a tent of garbage – farmer agony

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் குறைந்த தண்ணீரைக் கொண்டும் கோடைக் காலத்திலும் வற்றாத ஆறாக ஓடுகிறது. இந்த ஆற்றின் இடது கரையோரத்தில் கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களாக பெரம்பட்டு, மேலக்குண்டலபாடி, ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதேபோல் ஆற்றின் வலதுகரை பகுதியில் அளக்குடி ஆச்சாள்புரம், படுகை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு மோட்டார் பம்பு செட்டை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர்.

 

மேலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சிதம்பரம், அண்ணாமலை நகர், கடலூர் அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றை இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீருக்கும் விவசாய பாசனத்திற்கும் முழுவதுமாக நம்பி உள்ளனர். இந்த மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் கொள்ளிடம் ஆறு இருந்து வருகிறது.

 

ஆற்றில் மீன்வளம் உள்ளதால் இதனை நம்பி 50க்கும் மேற்பட்டவர்கள் துடுப்பு படகு மூலம் மீன் பிடித்து வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறார்கள். ஆற்றில் புது தண்ணீர் வரும்போது மீன்கள் அதிக அளவு வரும். இதனைப் பிடிக்க பெரும் கூட்டமே கொள்ளிடம் ஆற்றில் திரண்டு இருப்பார்கள்.

 

இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் அல்லது வேறு இடங்களில் வசிப்பவர்கள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வீட்டின் கழிவுகள், குப்பைகள், மக்கா குப்பைகளை டிராக்டர் மூலம் எடுத்து வந்து லோடுலோடாக கொட்டி வருகிறார்கள்.

 

இது கொள்ளிடம் ஆற்றுக்கு மட்டுமல்ல பொதுமக்களின் குடிநீருக்கும், விவசாயிகளின் பாசனத்திற்கும், ஆற்றின் மீன்வளத்தையும் கடுமையாகப் பாதித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் பழ. வாஞ்சிநாதன் கூறுகையில் “மழைக் காலங்களில் ஆற்றில் அதிக தண்ணீர் வரும்போது கரையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் மக்கா குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீரோடு அடித்துச் சென்று விவசாய நிலங்களுக்கு செல்லும்.

 

இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டு விளைநிலம் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மகசூல் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் விவசாயக் கூலி தொழிலாளர்களும் வயலில் வேலை செய்யும்போது பிளாஸ்டிக் கழிவுகள் காலில் குத்தி பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுபோன்ற குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டக்கூடாது என அறிவுறுத்தி பொதுப்பணித்துறை சார்பில் பதாகை கூட வைக்கவில்லை.

 

மேலும் கொள்ளிடம் ஆற்றில் மனிதக் கழிவுகளை டிராக்டரில் எடுத்து வந்து பைப்பு மூலம் கொட்டுகிறார்கள். இது ஆற்றில் தண்ணீர் குடிக்கும் கால்நடைகளுக்கு நேரடியாக பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். மேலும் இந்த தண்ணீரை மறைமுகமாக குடிநீராகப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும்  மர்ம நோய்களை ஏற்படுத்துகிறது.

 

கொள்ளிடம் ஆற்றில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைக் கண்காணிக்க பொதுப்பணித்துறை தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும். மனிதக் கழிவுகள், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டக்கூடாது என எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்