தலைமை தேர்தல் அதிகாரி தமிழக அரசு கட்டுப்பாட்டில் நீடிக்கக்கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வரும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனராகவும் நீடிக்கிறார். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்பது மட்டுமின்றி, தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியின் நம்பகத்தன்மையையும் சீர்குலைத்து விடும்.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த இராஜேஷ் லக்கானி அப்பதவிலிருந்து தம்மை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டதையடுத்து, அவருக்கு பதிலாக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யப்பிரதா சாகு கடந்த 22.02.2018 அன்று நியமிக்கப்பட்டார். ஆனாலும், உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பை ஏற்றுக் கொள்ளாத சாகு, மூன்று வாரங்கள் கழித்தே புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால், அடுத்த சில வாரங்களில் தாம் ஏற்கனவே வகித்து வந்த சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பதவியையும் கூடுதலாக கவனித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். இதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவி என்பது மிகவும் முக்கியமான பொறுப்பாகும். சம்பந்தப்பட்ட மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? அந்த மாநிலத்திலிருந்து மக்களவைக்கு செல்லவிருக்கும் உறுப்பினர்கள் யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கான தேர்தல்களை நடத்தும் முக்கியமானப் பொறுப்பு அவரிடம் தான் ஒப்படைக்கப்படுகிறது. அத்தகையப் பதவியில் இருப்பவர்கள் அனைத்துக் கட்சிகளின் நம்பிக்கையை பெற்றவர்களாகவும், நடுநிலை தவறாதவர்களாகவும் இருக்க வேண்டும். நம்பகத்தன்மை சிறிதளவு குலைந்தாலும் கூட அவர்கள் நடத்தும் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடந்தது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படாது. இது ஜனநாயகத்திற்கு தோல்வியாக அமைந்து விடும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக அமர்த்தப்பட்ட ஒருவரை, சென்னைக் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பதவியையும் கூடுதலாக வழங்கி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தமிழக ஆட்சியாளர்கள் துடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு அவரது சேவை கண்டிப்பாகத் தேவைப்படுவதாகவும், இதற்காக அடுத்த 3 மாதங்களுக்கு அவரை மாநில அரசு பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாகவும், அதை ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னைக் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் வாரிய இயக்குனர் பதவியை கவனிக்க தமிழகத்தில் தகுதியான இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளே இல்லை என்பது போன்றும், அப்பணிக்கு சத்யப்பிரதா சாகு மட்டும் தான் அதற்குத் தகுதியானவர் என்பது போன்றும் ஒரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. முதன்மைச் செயலாளர் நிலையில் வெ.இறையன்பு உள்ளிட்ட பல அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை சென்னைக் குடிநீர் வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவே நியமிக்க முடியும். செயலாளர் நிலையில் உதயச்சந்திரன், தேவ் ராஜ் தேவ் உள்ளிட்ட பல அதிகாரிகளும் அவர்களின் திறமைக்கு ஏற்பில்லாத பணியிடங்களில் உள்ளனர். அவர்களை சென்னைக் குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனராக அமர்த்தலாம். சென்னைக் குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர்களில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர் என்ற பாராட்டைப் பெற்றிருந்த அருண்ராய், கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு முக்கியத்துவம் இல்லாத மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அருண்ராய் நேர்மையாக இருந்தார்; முறைகேடுகளுக்கு துணைபோக மறுத்தார் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஊழலுக்கு துணை போக மறுத்ததற்காக மாற்றப்பட்ட நேர்மையான அதிகாரி இருந்த இடத்தில் சத்யப்பிரதா சாகுவை அடுத்த 3 மாதங்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அழுத்தம் கொடுக்கிறது என்றால் அது கண்டிப்பாக நல்ல விஷயத்திற்காக இருக்க வாய்ப்பில்லை. சத்யப்பிரதா சாகு இதுவரை எந்தக் குற்றச்சாற்றுகளுக்கு உள்ளாகாதவர் என்பது உண்மை தான். ஆனால், அவரை இயக்குபவர்கள் நேர்மையற்றவர்கள் என்பதால், அவர்கள் விருப்பப்படி செயல்படுபவர்களையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகிப்பவர்கள் தமிழகத்தைச் சேராதவர்களாக மட்டுமின்றி, தமிழகத் தொகுப்பைச் (Cadre) சேராதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதுபற்றி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நசீம் ஜைதியிடம் மனு அளித்துள்ளேன். அதற்கு மாறாக, தலைமைத் தேர்தல் அதிகாரியையே ஓர் ஊழல் அமைச்சரின் கீழ் பணியாற்ற தேர்தல் ஆணையம் அனுமதித்தால், தலைமைத் தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகளில் அமைச்சரின் குறுக்கீடு இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இது சத்யப்பிரதா சாகு தலைமையில் நடத்தப்படும் தேர்தல்கள் மீது ஐயத்தையே ஏற்படுத்தும். இதைத் தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
எனவே, சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பதவியிலிருந்து சத்யப்பிரதா சாகுவை உடனடியாக விடுவித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பணியை மட்டும் கவனிக்கும்படி ஆணையம் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் தலைமைத் தேர்தல் அதிகாரி பணியிலிருந்து சாகுவை விடுவித்து, அப்பணியில் அப்பழுக்கற்ற வரலாறு கொண்ட இ.ஆ.ப. அதிகாரியை ஆணையம் அமர்த்த வேண்டும்.