பணிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துக்கொண்டு இருகரைகளையும், கீழனையின் மதகுகளையும் முத்தமிட்டபடி செல்கிறது காவிரிதண்ணீர். அதனை காண்பதற்கு குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக அனைக்கரை கீழனை ’டேம்’ க்கு வந்து கண்டு சந்தோஷமடைகிறார்கள்.
ஒருகாலத்தில் தண்ணிரை வாழ்வாதாரமாக கொண்டிருந்த மக்கள் தற்போது காட்சிபொருளாக காண்பதையும் கானமுடிந்தது. அவர்கள் மீது தவறுஇல்லை. ஆளும் அரசாங்கங்களின் வஞ்சகம், சூழ்ச்சி, பாராமுகத்தினாலும், இயற்கையின் கொடுமையினாலும் இவ்வளவு நாள் வரண்டு கிடந்தது. கொள்ளிடம்,காவிரி ஆறுகள் என்றாலே அது மணல் உற்பத்தி செய்யபடும் இடமாகவே 10 ஆண்டுகளாக அறிந்துவந்த செய்தி.
தென்மேற்குப் பருவமழையினால் காவிரியில் ஏற்படும் வெள்ளபெருக்கை சமாளிப்பதற்கு 1943 ம் ஆண்டு மேட்டூர் அணைக்கட்டப்பட்டது. அதில்இருந்து விநாடிக்கு ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஏழாயிறம் கனடி தண்ணீர் வெளியேற்றும் அமைப்புடன் கட்டப்பட்டது. அதன் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு பாசனம் அளிக்கப்பட்டுவருகிறது.
அதிக வெள்ளபெருக்கு ஏற்படும் காலங்களில் டெல்டா மாவட்டங்களை தண்ணீரி முழ்கடித்து சேதப்படுத்தியது. அந்த வெள்ளநீரின் வடிகாலாக விளங்கிவருகிறது கொள்ளிடம் ஆறு. திருச்சிக்கு மேற்கே 18 வது கிலோமீட்டரில் முக்கொம்பு அருகில் 19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சர் ஆர்தர் காட்டன் காலத்தில் கட்டப்பட்டது. சோழமன்னன் கட்டி அசத்திய கல்ணையின் மீது கொண்ட ஈர்ப்பினால், அதுபோலவே பயன்மிகுந்த அனையாக கட்டினான்.
அங்கிருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளநீரை தடுத்துநிறுத்தி செம்மன் பூமியாக காய்ந்துகிடந்த வடார்காடு மாவட்டங்களை பசுமையாக்கும் விதமாக அனைக்கரை என்னும் இடத்தில் கீழனையை கட்டி வடக்கே, வடக்கு ராஜன் ஆற்றின் வழியாக கடலூர், அரியலூர் மாவட்டங்களும், தெற்கே , தெற்கு ராஜன் ஆற்றின் மூலம் நாகை, தஞ்சை மாவட்டங்களில் பாசனத்திற்கு பாயசெய்தனர் ஆங்கிலேயர்கள்.
அப்படி தண்ணீர் மேலாண்மையை வகுத்து பாசனமுறையை உலகத்திற்கு கற்றுக்கொடுத்த தமிழ்சமுகம் சமீபகாலமாக குடிதண்ணீருக்கே கையேந்தும் நிலையானது. ஆறுகள்,ஏரிகள்,வாய்க்கால்கள், வரண்டு பாளம்,பாளமாக வெடித்து காணப்பட்டது. நிலத்தடி நீர் படுபாதாலத்திற்கு சென்று கடல் நீர்உள்ளே புகுந்தது. முபோகம் விளைந்த காவிரிபடுகை ஒரு போகத்திற்கே வழியில்லாத நிலையானது.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த காவிரி பிரச்சினையில் கர்நாடகமும், நீதிமன்றமும், மத்திய அரசும் பாராமுகத்துடனே துரோகம் செய்து சொற்ப தண்ணீரை வழங்கியது. ஆனால்இயற்கை அதனை தவிடுபொடியாக்கி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. வரலாறு கானாத வகையில் ஒரே ஆண்டில் அதுவும் ஆகஸ்ட் மாதமே இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிறம்பியது. விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து வெளியேற்றப்பட்டது. ஆனால் முறையான பாசன வசதி இல்லாமல் போனதன் விளைவாக மொத்த தண்ணீரும் கடலுக்கு சென்றது. இதுவரை மணல் திட்டுகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கொள்ளிடம் கொண்ட அளவிற்கு தண்ணீர் செல்வதை மனமகிழ்ந்து பார்த்து சந்தோஷம் அடைந்தனர்.
அனைக்கரை பாலத்தில் இளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, கல்லூரி மாணவிகள் முதல் காதலர்கள் வரை அனைக்கட்டில் ஆர்ப்பரித்துவரும் தண்ணீரை கண்டு குதுகளித்தனர். ஓவ்வொருவரும் குடும்பத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ஒரு வாரமாக திருவிழா கோலமாகவே அனைக்கரை கானப்படுகிறது.
பேரக்குழந்தைகளோடு வந்திருந்த திருப்பனந்தாளை சேர்ந்த கிருஷ்ணன் கூறுகையில், ‘’ இதுக்கு முன்னாடி 2005 ம் ஆண்டு இதவிட அதிகமான தண்ணீர் வந்துச்சி, மகேந்திரபள்ளி, குடிதாங்கி உள்ளிட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு 2015 ம் ஆண்டு மூன்று நாள் இது போல தண்ணீர் வந்துச்சி, அது வெள்ளத்தால் வந்த தண்ணீர் அல்ல, பாசனத்திற்கு வந்த தண்ணீரை, அன்றைய தஞ்சை கலெக்கட்டர் மணல் கொள்ளை நடந்த இடங்களை மூடி மறைக்க திறந்துவிட்டார். அதன் பிறகு இப்போது தான் போகுது, தண்ணீரை பார்க்கும் போது என்னன்னமோ தோனுதுங்க, ஆனால் இவ்வளவு தண்ணீரும் பயனில்லாம கடலுக்கு போவதை நினைத்து வேதனையாக இருக்கு. ஒரு காலத்தில் தண்ணீரோடு ஒண்டி உறவாடினோம், இன்று அதிசய பொருளாக, காட்சிப்பொருளாக மாறிவிட்டது.’’ என்றார்.