கலைஞர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வாங்கிய பெண்மணி, அதில், 200 ரூபாயை செலவு செய்து, சரவெடி வைத்துக் கொண்டாடியுள்ளார்.
திருச்சி திருவானைக்காவல் மேலக் கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வாசுகி (வயது 37). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வாசுகி, கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, அவருக்கு நேற்று வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வந்து சேர்ந்துள்ளது.
இதனால் மனமகிழ்ச்சி அடைந்த வாசுகி, தனக்கு வந்த, ஆயிரம் ரூபாய் பணத்தில், 200 ரூபாயை எடுத்துள்ளார்.அதில், சரவெடி ஒன்றை வாங்கி, தனது குடும்பத்துடன் வீட்டின் முன்பு வெடித்து கொண்டாடினர். இது குறித்து பேசிய வாசுகி “தனக்கு தந்தையும், அண்ணனும் ஆகிய முதல்வர் ஸ்டாலின், ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, முதல்வர் எனக்கு வழங்கிய தொகையில், சரவெடியை வாங்கி வெடித்துள்ளேன். மேலும், இனிமேல் வரும் இந்த தொகையை எனது இரண்டு பெண் குழந்தைகளுக்காக செலவழிப்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.