மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி அருகே இருக்கும். உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த யாதவ இன மக்கள் மாடு மேய்க்கும் தொழிலை குலத்தொழிலாக கொண்டுள்ளனர். ஊரில் 15- க்கும் மேற்பட்டோர் கிடை மாடுகளை (மலை மாடுகளை) வைத்துள்ளனர். சராசரியாக நபர் ஒன்றுக்கு 750 முதல் 1000 மாடுகளை வைத்து நிர்வகித்து வருகின்றனர். தை மாதம் வீட்டை விட்டு புறப்படும் அவர்கள் தரிசல் பூமி மற்றும் தோட்டங்களில் மாடுகளை தங்க வைக்கின்றனர்.
இதற்கு நாள் ஒன்றுக்கு மாடு ஒன்றுக்கு ரூ.1 முதல் 2 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். மாட்டுசானம், இயற்கை உரம் என்பதால் விவசாயிகள் அதிக நாட்கள் மாடுகளை தங்களின் தோட்டங்களில் தங்க வைக்கின்றனர். ஒருபுறம் நாள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டாயிரம் வரை வாங்கினாலும், மாடுகளுக்கு தண்ணீர் செலவுக்காக ஆயிரம் முதல் ஆயிரத்தி ஐநூறு வரை செலவழிக்கின்றனர். நாடோடிகளாக திரிந்து காடு, மலை என மேய்ச்சல் நிலங்களை தேடி அலையும், இவர்கள் விவசாயிகளின் நண்பனாக உள்ளனர்.
நிலக்கோட்டையில் இருந்து வத்தலகுண்டு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டுக் கொண்டிருந்த கிடைமாடு (மலை மாடு) உரிமையாளர் ராமரிடம் கேட்ட போது... எங்கள் வாழ்க்கையே நாடோடி வாழ்க்கை தான். அழிந்து வரும் அரியவகை மாடு இனங்களான முள்ளிப்பாளையம், வெள்ளைக்கொம்பன், கட்டக்கொம்பன், கருத்தக்கொம்பன், நெட்டக்காலன், நெய்க்காலன், கரிசல்பசு உட்பட 18 வகை மாடுகளை நாங்கள் மேய்த்து வருகிறோம். எங்கள் ஊரை சேர்ந்த பலருக்கு இது தான் குலத்தொழிலாக உள்ளது.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் மாடுகளை மலைகளில் மேய்க்க அனுமதி கொடுத்தனர். அப்போது நாங்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தோம். ஆனால் வனத்துறை அதிகாரிகள் மலைகளில் மாடுகளை மேய்க்க அனுமதி கொடுப்பதில்லை. அதனால் நாங்கள் நாடோடிகளாக ஊர் ஊராக சென்று மாடுகளை மேய்த்து வருகிறோம். வருடத்திற்கு ஒருமுறை தான் எங்கள் வீடுகளுக்கு செல்கிறோம். தை மாதம் வீட்டை விட்டு புறப்படும் நாங்கள் 11 மாதம் கழித்து கார்த்திகை மாதம் தான் ஊருக்கு செல்வோம் என்றார்.
மாட்டுச்சானம் நல்ல இயற்கை உரம் என்பதால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் மாடுகளை பட்டி போட ரூபாய் ஆயிரம் முதல் ஆயிரத்தி ஐநூறு வரை கொடுக்கிறார்கள். ஒரு சில விவசாயிகள் மின் மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து மாடுகளுக்கு இலவசமாக தண்ணீர் கொடுப்பார்கள். மின்மோட்டார், கிணறு வசதி இல்லாத இடங்களில் நாங்கள் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மாடுகளுக்கு கொடுக்கிறோம். இதனால் எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்தி ஐநூறு வரை செலவாகிறது என்று கூறினார். இந்த அரியவகை மாடு இனங்களை காப்பாற்றி விவசாயிகளின் நண்பனாக வரும் கிடைமாடு உரிமையாளர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் மலைகளில் மேய்ச்சலுக்கு அனுமதித்தால் அவர்களின் வாழ்வாதாரம் உயரும். அழிந்து வரும் மாடு இனங்களும் காப்பாற்றப்படும்.