உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ - ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். நேற்று நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மதுரை வந்தடைந்த இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்துள்ளனர். இன்று காலை டீ போடுவதற்குப் பயணிகள் சிலிண்டர் பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் மூன்று சிலிண்டர்கள் மற்றும் விறகுகளும் வைத்திருந்ததால் தீ மளமளவெனப் பற்றியதில் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. இதில், 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 3 லட்சமும், ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து உ.பி மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்ய தென்னக ரயில்வே போலீசார் லக்னோ போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் மேலாளர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ரயில் தீ விபத்தில் இறந்த 9 பேரின் உடல்களும் இன்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரையில் இருந்து சென்னை கொண்டு வரப்படுகிறது. சென்னையில் இருந்து 9 பேரின் உடல்களும் விமானம் மூலம் லக்னோவுக்கு நாளை அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த ரயில் விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தீ விபத்தில் சிக்கி ரயில் பெட்டி எரிந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து வருகிறார். தீ பிடித்து எறிந்த ரயில் பெட்டியில் ஏறி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ரயில்வே வாரிய நிர்வாக மேலாளர்கள், உயர் அதிகாரிகள், ரயில்வே போலீசார் என பலரும் உடன் இருந்தனர். ஆய்வின் போது ரயில்வே அதிகாரிகளிடம் எவ்வாறு விபத்து நடைபெற்றது. தீ விபத்து எத்தனை மணிக்கு நடைபெற்றது. எத்தனை சிலிண்டர்கள் ரயில் பயணிகள் பயன்படுத்தினார்கள் என ஏராளமான கேள்விகளை கேட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அதே சமயம் இந்த ரயில் தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்திரி நாளை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்வார் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்திரி தலைமையில் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள், விபத்தை பற்றி தகவல் தெரிந்தவர்கள் பாதுகாப்பு ஆணையரை சந்தித்து தகவல் தரலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.