வீட்டுத் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் துடைப்பத்துக்கு சீமாறு, விளக்குமாறு என வேறு பெயர்களும் உண்டு. விநோத நம்பிக்கைகளால் துடைப்பம் படும்பாடு சொல்லிமாளாது. காலையில் எழுந்ததும் துடைப்பத்தைப் பார்க்கக்கூடாது என்ற நெறிமுறைகூட உண்டு. தீய ஆவிகளை விரட்டும் ஆற்றல் துடைப்பத்துக்கு உண்டென்ற நம்பிக்கையால், குழந்தை உறங்கும் தொட்டிலுக்கு அடியில் துடைப்பத்தை வைக்கும் பழக்கம் தற்போதும் உள்ளது. பேயோட்டவும் துடைப்பத்தையே பயன்படுத்துகின்றனர். குழந்தை வரம் கிடைப்பதற்கு, பூசாரி கையால் பக்தர்கள் துடைப்பத்தால் அடிவாங்குவதும் சில கோவில்களில் நடக்கின்றன.
ஆண்டிபட்டி – மறவபட்டி முத்தாலம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில், அந்த கிராமத்தினர் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்கின்றனர். அடிப்பதற்குமுன், சேற்று நீரிலும், சகதியிலும் துடைப்பங்களை நனைக்கின்றனர். சேறு, சகதியில் புரண்டு உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்குகின்றனர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ, பிரிந்த உறவுகள் சேர, துடைப்பத்தால் அடித்துக்கொள்வதை ஒருவித வழிபாட்டு நிகழ்ச்சியாகவே நடத்திவருகின்றனர்.
மதுரையில் ஒரு முக்கியத் திருவிழாவின் நிறைவில், கடவுள் விக்கிரகம் தீட்டுப்பட்டுவிட்டதென, அதனைப் போக்குவதற்கு விளக்குமாற்றால் அடிப்பதும்கூட, ஐதீகமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதென்றால், விநோத நம்பிக்கைகளை என்னவென்று சொல்வது?