மக்களிடமும் மாணவர்களிடமும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நவம்பர் 17 முதல் 27 ஆம் தேதி வரை முதலாமாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பாளர்கள் என ஏராளமானோர் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் சின்னாரெட்டிபட்டியில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் படிக்கும் 4 ஆம் வகுப்பு மாணவி கு.காவியதர்ஷினி, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு, "விருதுநகர் முதல் புத்தகத் திருவிழாவில் மகத்தான வெற்றி சாதனை படைத்த உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் தங்களோடு பணியாற்றிய அனைவருக்கும் எங்களுடைய அன்பான வாழ்த்துகள்" எனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியும், "முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழா குறித்த தங்களது வாழ்த்து மடல் கிடைக்கப்பெற்றது மிக்க மகிழ்ச்சி. மாணவச் செல்வங்களாகிய நீங்கள் உங்களுக்கான லட்சியம் ஒன்றை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அதை அடைய முயற்சிக்கும்போது வரும் தடைகளை விடாமுயற்சியுடன் எதிர்கொண்டு இலட்சியத்தை அடைந்து வாழ்வில் வெற்றிபெற்று சந்தோஷமாக இருங்கள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்" எனத் தெரிவித்து பதில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே மாணவர் ஒருவர் மழையின்போது பள்ளிக்கு விடுமுறை கேட்டதற்கு, திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் "பாலே இங்க தேறல.. பாயாசம் கேட்குதா.." என்று பதிலளித்து இருந்தார். இதேபோன்று மற்றொரு மாணவரின் கேள்விக்கு, நாளை பள்ளிக்குச் செல்ல சைக்கிளை தயாராக வைத்திருங்கள் என்று பதிவிட்டு இருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.