பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
உலக புகழ் பெற்ற பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி, தமிழக அரசின் விரிவான கரோனா தடுப்பு வழிகாட்டுதலுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தொடங்கியுள்ளது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தென்மண்டல் ஐ.ஜி. முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதலில் பாலமேடு மகாலிங்க சாமி காளை உள்ளிட்ட 7 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 651 மாடுபிடி வீரர்கள், 800 காளைகள் களம் காண இருக்கின்றன. ஜல்லிக்கட்டில் வெல்லும் காளைகள், வீரர்களுக்கு கார், கட்டில், சைக்கிள், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைச் செய்யப்பட்டு தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.