மதுரை திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சமைக்கப்பட்ட உணவினை ஒன்றாக அமர்ந்து உட்கொண்டு விழாவினைக் கொண்டாடினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பம்பட்டி கிராமத்தில் காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் உணவுத் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்தத் திருவிழாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது.
சுமார் 60 ஆடுகள் பலியிடப்பட்டு 2000 கிலோ அரிசி சாதமாக தயார் செய்யப்பட்டது. இதன்பின் கரும்பாறை முத்தையா சாமிக்கு சமைக்கப்பட்ட உணவினை படையல் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன்பின் அங்கு கூடிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விருந்தில் திருமங்கலம், கரடிக்கல், செக்கானூரணி, சோழவந்தான், சாத்தான்குடி என 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு நடைபெறும் அன்னதான விழாவிற்காக இந்த ஆண்டே மக்கள் நன்கொடையாக ஆடுகளைக் கொடுத்தனர்.
விவசாயம் செழிக்கவும் மக்கள் நோய் நொடியின்றி வாழவும் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அன்னதானத்தைச் சாப்பிட்ட ஆண்கள் இலைகளை அப்புறப்படுத்தாது அங்கேயே விட்டுச் செல்வர். இலைகள் மண்ணோடு மண்ணாக மக்கி மாயமானால் நன்மை நடக்கும் என நம்பப்படுகிறது.