Skip to main content

“சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோதிகளா?” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Madurai High Court Questioned about minorities

 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹாஜா சரீஃப். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று காவலராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் மனித நீதி பாசறை என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். இதனை காரணமாக கூறி இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவி உயர்வு, பணப்பலன் ஆகியவை வழங்கப்படவில்லை என இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

 

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (01-11-23) நீதிபதிகள் முன்பு வந்தது. ஹாஜா சரீஃப் கொடுத்த மனுவை விசாரித்த நீதிபதி, “காவலர் ஹாஜா சரீஃப் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. இதனை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஹாஜாவுக்கு கூடிய விரைவில் பதவி உயர்வு வழங்க வேண்டும். மேலும், இன்னும் 4 வாரத்திற்குள் அவருக்கு பணப்பலன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

 

மேலும் அவர், “நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆனால், இன்னும் சிறுபான்மையினர், இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரிகளும் தற்காலத்திற்கு ஏற்றார்போல் தங்கள் சிந்தனைகளையும், மனநிலையையும் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நாட்டிற்கு சேவை செய்வதற்கும், அவர்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். இந்த உலகில் யார் யாருக்கும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை” என்று தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்