பிற மாநில மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் ஆய்வாளர் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லைக்குள் கொண்டு வந்து கொட்டும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட கேரளாவில் இருந்து லாரி மூலம் தமிழ்நாட்டில் உள்ள குருவன்கோட்டையில் அந்த மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இதனை கண்ட அந்த கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். அதன் பேரில், அந்த லாரியை பறிமுதல் செய்து உரியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தோம். இது தொடர்பான விசாரணை ஆலங்குளம் கீழமை நீதிமன்றத்திற்கு வந்த போது, பறிமுதல் செய்த லாரியை விடுவித்து உத்தரவிட்டது. இதனால், இது தொடர்பான வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணை இன்று (18-11-23) மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட போது, ‘அண்டை மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டாஸ் போட சட்ட வழிவகை செய்யப்பட்டு வருகிறது’ என்று கூறியது. இதனையடுத்து, மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ‘விதிகளை மீறி மருத்துவ கழிவு கொட்டி சுகாதார சீர்கேட்டை உருவாக்குவோரை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.
சட்ட விரோதமாக மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக சட்டத்திருத்தம் கொண்டுவரும் நடவடிக்கை வரவேற்கத்தக்க விஷயம்” என்று தெரிவித்தது. மேலும், மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரியை விடுவித்த ஆலங்குளம் கீழமை நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டது.