திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டது. இந்த நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இந்த நூலகத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், சட்ட மாணவர்கள், இளைஞர்கள் சட்ட விழிப்புணர்வு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஏராளமான சட்ட புத்தகங்களும், சட்ட குறித்த விழிப்புணர்வு புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.