
ராமாயண இதிகாச தலங்களுக்கு சென்று வர விரும்புவர்களுக்கு என்றே ஸ்பெஷலாக ஒரு ரயில் விடப்பட்டுள்ளது. ‘ராமாயண சுற்றுலா ரயில்’எனும் அந்த ரயிலை மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே நேற்று மதுரையில் துவக்கி வைத்தார். துவக்க விழாவில், தமிழக அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, உதயகுமார் பங்கேற்றனர்.

திருநெல்வேலியிலிருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல், சித்ரகுட்தாம்- பக்ஸார் - ரகுநாதபுர சிதமர்ஹி - ஜனக்புரி அயோத்தி - நந்திகிராம் - அலகாபாத் - சிறிங்காவெர்பூர் - நாசிக் - ஹம்பி ஆகிய நகரங்கள் வழியாக சென்று மீண்டும் திருநெல்வேலிக்கு வரும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 15ஆயிரத்து 990 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுடன் இந்த கட்டணத்தில் பயணிக்கலாம். மேலும், தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலாத் தலங்களில் தங்கும் வசதி, ரயில் நிலையங்களில் இருந்து சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளிட்டவையும் இந்த கட்டணத்தில் அடங்கும்.