குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர்
அதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தையடுத்து, சென்னை பல்கலைக்கழகத்திற்கு நாளை (18.12.2019) முதல் டிசம்பர் 23- ஆம் தேதி வரை விடுமுறை என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி டிசம்பர் 24- ஆம் தேதி முதல் ஜனவரி 1- ஆம் தேதி வரை ஏற்கனவே விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பல்கலைக்கழகத்தில் நாளை (18.12.2019) முதல் (23.12.2019) வரை நடைபெறவிருந்த வகுப்புகள், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. ஜனவரி 1- ஆம் தேதி வரை கல்வியல் ரீதியான பணிகளுக்காக பல்கலைக்கழக வளாகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். விடுமுறை விவரம் பற்றி மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலை. நிர்வாகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பல்கலை. நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த போதிலும், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் 100- க்கும் மேற்பட்ட போலீசார் நுழைந்தனர். சிறிது நேரத்திற்கு பின்பு போலீசார் தங்களது வாகனங்களுடன் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறினர். இதனால் சிறிது நேரம் கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.