Skip to main content

“மகன் சொத்தில் தாய்க்கு உரிமையில்லை” - சென்னை உயர்நீதிமன்றம்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 Madras High Court says Mother has no right in property of married son

 

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அக்னஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், மோசஸ் கடந்த 2012ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

 

இதில் அவர் இறப்பதற்கு முன் அவருடைய சொத்தில் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அக்னஸ்க்கும் பவுலின் இருதய மேரிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய மகனின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று பவுலின் இருதய மேரி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசஸின் சொத்தில் அவரது தாய்க்கும் பங்கு உள்ளது என்று உத்தரவிட்டுத்  தீர்ப்பளித்தது. 

 

இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான வழக்கு இன்று (18-11-23) விசாரணைக்கு வந்தது. அப்போது அக்னஸின் சார்பில் வழக்கறிஞர் மித்ரா நேஷா வாதிட்டார்.அதில் அவர், “கணவர் இறந்தால், அவருடைய விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்கே சொத்தில் பங்கு உள்ளது. ஒருவேளை மனைவியோ அல்லது குழந்தைகளோ இல்லை என்றால் அவருடைய தந்தை தான் சொத்தின் வாரிசு தாரர் ஆவார். இதில் இறந்துபோன நபரின் தந்தையும் இல்லை என்றால் தான் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகள் ஆவார்கள். எனவே, மோசஸுக்கு மனைவி மற்றும் குழந்தை உள்ள நிலையில் அவருடைய சொத்தில் யாரும் பங்கு கேட்க முடியாது” என்று வாதிட்டார்.

 

அவருடைய வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “திருமணமான மகன் இறந்த நிலையில் அவருடைய சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான வழியே இல்லை. இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, சொத்தில் தாய் பங்கு கேட்கமுடியாது என்பதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்த விரும்புகிறது. எனவே, சொத்தில் தாய்க்கும் பங்கு உண்டு என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்” என்று தீர்ப்பளித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்