மத்தியப் பிரதேசத்தில் இருந்து மதுரைக்கு தர்மபுரி வழியாக கடத்திச்செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் ஹெராயின் போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் காருடன் பறிமுதல் செய்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் இருந்து மதுரைக்கு தர்மபுரி வழியாக ஹெராயின் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து சந்தேகத்திற்குரிய காரை கண்காணித்து வந்தனர்.
ஆனால் வழியில் எங்கும் காரை மடக்கிப் பிடிக்க முடியாமல் தடுமாறினர். பாதி வழியில் கார் செல்லும் பாதையை தவற விட்டனர். இதனால் சில மாநிலங்களை கடந்த பின்னரும் கடத்தல் கும்பலை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது.
ஒருவழியாக அந்த கார், ஞாயிற்றுக்கிழமை (மே 1) அதிகாலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் டோல்கேட் அருகே செல்வதை அறிந்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், டோல்கேட் பகுதியில் சந்தேகத்திற்குரிய காரை மடக்கிப் பிடித்தனர். அந்த காரில் இருந்து 3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஹெராயின் போதைப் பொருளையும், காரையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 3 கோடி ரூபாய் ஆகும்.
காரில் வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவர்களில் ஒருவர் மதுரை இந்திரா நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 47) என்பதும், மற்றொருவர் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மாவட்டம் பேஹல்லா பகுதியைச் சேர்ந்த ராதேஷியாம் (வயது 54) என்பதும் தெரிய வந்தது. பிடிபட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.