ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட நகைக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். மேலும் திருடப்பட்ட 97 பவுன் நகை மற்றும் இரண்டு இருசக்கர வாகனம், டிவி பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சங்கரன் நாயுடு தெருவில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த நகைக் கடையில் கடலூர் முதுநகர் அருகேயுள்ள சான்றோர் பாளையத்தை சேர்ந்த கலைச்செல்வம் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த கடையின் உரிமையாளர்களுக்கு நம்பிக்கையாகவும் இருந்துள்ளார். பெண்கள் அணியும் நெக்லஸ் போன்ற நகைகளுக்கு இரவில் சோதனை செய்து பீரோவில் பூட்டி வைப்பது இவரது வேலை.
இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக நகைக்கடையில் சிறுக சிறுக நகைகளை திருடி அந்த நகைகளை கூத்தப்பாக்கத்திலுள்ள பிரபல நகை அடகு கடையில் வைத்து ஆடம்பர செலவு செய்து வந்துள்ளார். இரண்டு வருடமாக கடையில் விடுமுறையும் இல்லாமல் வேலை பார்த்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடை உரிமையாளர்களுக்கு கலைச்செல்வம் மீது சந்தேகம் வந்து கடையில் உள்ள நகைகளை சோதனை செய்துள்ளார்கள். அதில் ஒரு கிலோ நகை காணாமல் போனது கவனத்திற்கு வந்தது.
உடனடியாக கலைச்செல்வத்தை கேட்டபோது பதில் கூறாமல் மறுநாள் முதல் கடைக்கு வரவில்லை. இதனால் கடை உரிமையாளர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கடலூர் துணை கண்காணிப்பாளர் டி.எஸ்.பி சாந்தி தலைமையில் போலீசார் குற்றவாளியை தேடிவந்தனர்.
நகை கடை ஊழியர் கலைச்செல்வத்தை கைது செய்து விசாரணை செய்தனர். அடகு கடையில் வைத்த 97 பவுன் நகைகளை கைப்பற்றியதுடன், திருடிய பணத்தில் வாங்கிய 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு டிவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கலைச்செல்வம் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு வீட்டுக்கு தெரியாமலே நண்பர்களுடன் தினமும் 5,000 முதல் 10,000 வரை செலவு செய்து வந்துள்ளார். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கே நகை கடையில் எடுத்ததாக தெரிய வந்தது. மேலும் சில நகைகள் வேறு அடகு கடையில் வைத்து உள்ளாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.