சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற முடியாமல் தங்கள் பிள்ளைகளின் படிப்புகள் மூலம் சமூகத்தில் முன்னேற முயற்சித்து வருகின்றனர். இதற்கு மாநில அரசு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு, இட ஒதுக்கீடு மூலம் மாணவர்கள் முன்னேறிச் செல்லும் உரிமையை வழங்கி வருகிறது. அப்படித்தான் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்த்து அதில் இருந்து விலக்கு வாங்கி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எந்தத் தடையுமின்றி கல்வியை வழங்க வழி செய்தது.
இந்நிலையில், மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தேசிய அளவில் நீட் எனும் நுழைவுத் தேர்வை கொண்டுவந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், அதனையெல்லாம் மீறி தமிழ்நாட்டிற்கும் நீட் அறிமுகம் செய்யப்பட்டு அமலுக்கு வந்தது.
2017ம் ஆண்டு நீட் தேர்வின் காரணமாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து நீட் தேர்வின் காரணமாக தமிழ்நாட்டில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 2019ம் ஆண்டு நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து அரசாணை பிறப்பித்தார். தொடர்ந்து 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்து அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் ஆளுநருக்கு அனுப்பியது. அதனை முதலில் திருப்பி அனுப்பிய ஆளுநர் இரண்டாம் முறை தமிழ்நாடு அரசு அனுப்பியதும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் “நீட் விலக்குக்கு ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்” என ஆளுநர் பேசினார். இதனால், மேலும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதேசமயம், தமிழ்நாட்டில் மட்டும் தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு என்று பாஜக தரப்பில் சொல்லிவந்த நிலையில், நுழைவுத் தேர்வுகளின் பயிற்சிகளுக்கான தலைநகரம் எனச் சொல்லக்கூடிய ராஜாஸ்தானின் கோட்டா பகுதியிலும் இந்த ஆண்டு தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்துவருகின்றன. இது குறித்து விசாரிக்க அந்த மாநில முதலமைச்சர் அஷோக் கெல்லாட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துப் படிப்பிற்கு நீட் இருப்பது போல், மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கு க்யூட் எனும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்து செயல்படுத்திவருகிறது மத்திய அரசு. இதற்கும் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சென்னை லயோலா கல்லூரியில் செயல்பட்டுவரும் மாணவர் அமைப்பான ‘அய்கஃப்’ தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளின் பாதிப்பை குறித்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். இந்தப் பாடலை மருத்துவர் கனவோடு இருந்து நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவுக்காக சமர்ப்பித்துள்ளனர். நீட் தேர்வு குறித்து அனிதா பேசிய ஒலியுடன் துவங்கியிருக்கும் இந்தப் பாடல், ‘கல்விக்கு சங்கூத சதிக் கூட்டம் ஒன்னாச்சு.. பட்டப் படிப்பு படிக்க வந்த நம்ம வாழ்க்கை பாழாச்சு..’ என நீள்கிறது. இந்தப் பாடலில் மறுக்கப்பட்டுவந்த படிப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் எனும் வரிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பள்ளியில் 12 வருடம் படித்த படிப்புகளைவிட பயிற்சி வகுப்புகளே நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற முக்கியம் என்பதை அழுத்தமாய் சொல்லியிருக்கிறார்கள். மேலும், மாணவர்களின் முன்னேற்றத்தை தடுத்து சமூகத்தில் மீண்டு வரவே கூடாது என நுழைவுத் தேர்வுகள் இருக்கிறது எனும் வகையில் பாடலை உருவாக்கியுள்ளனர்.